Thursday, November 25, 2010

மொபைல் போன் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் லாபம் குறைந்து வருகிறது-தினமலர்

ஐதராபாத்: மொபைல் போன் டவர்களுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பது, சந்தாதாரர்கள் தொடர்பான விசாரணையில் கடும் விதிகள் பின்பற்றப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் மொபைல் போன் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் லாபம் குறைந்து வருவதாக இந்திய மொபைல்போன் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்

.இது குறித்து, இச்சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் ராஜன் மாத்யூஸ் கூறியதாவது:மொபைல் போன் சந்தாதாரர்களுக்கு, சேவையை வழங்குவதற்கு முன்பாக, அவர்கள் தொடர்பான விசாரணையில் கடும் விதிகள் பின்பற்றப்படுவதால், பல்வேறு இடங்களில் மொபைல் ஆபரேட்டர்களுக்கு கடும் சிக்கல் ஏற்படுகிறது. சந்தாதாரர் தொடர்பான விசாரணைக்கு மட்டுமே கோடிக்கணக்கான ரூபாயை ஆபரேட்டர்கள் செலவிட வேண்டியுள்ளது. 

தற்போதைய நிலையில், ஒரு சந்தாதாரருக்கு 600 முதல் 700 ரூபாய் வரை செலவாகிறது.மேலும், கிராமப்புறங்களில் கட்டுமான வசதிகள் போதுமான அளவில் இல்லை. மேலும், மொபைல்போன் டவர்களுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க துவங்கியுள்ளன.டில்லியை எடுத்துக்கொண்டால், ஒரு மொபைல் போன் டவர் அமைப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டியுள்ளது. இது விரைவில் ஐந்து லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

நசிந்து வரும் இத்தொழிலால் ஏற்கனவே பல ஆபரேட்டர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது இத்தொழிலில் புதுப் புது முன்னேற்றங்கள் புகுத்தப்படுவதால், நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டு இருக்கிறது.தற்போது நிகர லாபம் 8 முதல் 10 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கிறது. இதிலிருந்து இன்னும் இரண்டு, மூன்று சதவீதங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. 

சில ஆபரேட்டர்கள் நிலைமை நஷ்டத்தில் உள்ளது.இதில், ஒன்று இரண்டு ஆபரேட்டர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என இருக்கின்றனர். மற்ற ஆபரேட்டர்களின் லாபம், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாம் காலாண்டில் குறைந்துள்ளது.மொபைல் போன் சேவையில் பிரபலமாக உள்ள 

பாரதி ஏர்டெல் நிறுவனம் லாபம் 27 சதவீதம் குறைந்துள்ளது. டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிரா நிறுவனத்தின் லாபம் இரண்டாம் காலாண்டில் 97 கோடி ரூபாயாக உள்ளது. இது 9 சதவீதம் குறைந்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 108 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருந்தது.இவ்வாறு ராஜன் மாத்யூஸ் கூறினார்.மத்திய தகவல் தொடர்பு துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், மொத்தமுள்ள 70 கோடி மொபைல் போன் வாடிக்கையாளர்கள் பற்றி மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

மும்பை போலீசார் சமீபத்தில் நடத்திய அதிரடி சோதனையில், பிரி-பெய்டு சந்தாதாரர்களில் 60 சதவீதம் பேர் போலியான ஆவணங்களைக் காட்டி சிம் கார்டு பெற்றுள்ளது தெரிந்துள்ளது.நாட்டிலுள்ள மொபைல் போன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 70 கோடி. இதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள தொகை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய். மேலும், இந்தியாவில் தான் கட்டணங்கள் குறைவாக உள்ளன.

No comments:

Post a Comment